குழந்தைகள் பலி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது அதிகளவு எலி மருந்து வைத்ததே அசம்பாவிதத்திற்கு காரணம்

குன்றத்துார்:குன்றத்துார், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன், 34; தனியார் வங்கி மேலாளர். இவரது வீட்டில் அட்டகாசம் செய்யும் எலிகளை கட்டுப்படுத்த, எலி மருத்து அடிக்கும் தனியார் நிறுவனத்தை, ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார்.

பெஸ்ட் கன்ட்ரோலர் எனும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், கடந்த 13ம் தேதி, கிரிதரன் வீட்டில் எலி மருந்து அடித்தனர். மேலும், வீட்டின் சில இடங்களில் எலி மருத்தை வைத்து சென்றனர்.

இதில் இருந்து வெளியேறிய நெடியால் கிரிதரன், அவரது மனைவி பவித்ரா, 30, மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன், 1, ஆகியோர் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டனர்.

இதில், விஷாலினி, சாய் சுதர்சன் ஆகியோர், குன்றத்துார் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். கிரிதரன், பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த சம்பவத்தில், குன்றத்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், எலி மருத்து அடித்த பின், வீட்டின் மூன்று இடங்களில் வைக்க வேண்டிய எலி மருந்தை 12 இடங்களில் ஊழியர்கள் வைத்து சென்றதால், அதில் இருந்து அதிகளவு நெடி வெளியேறி, பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தினகரன், 43, என்ற ஊழியரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், சங்கர்தாஸ், 36, என்பவரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை தேடுகின்றனர்.

தனியார் நிறுவனம் பயன்படுத்திய எலி மருந்தின் தன்மை ஆய்வு செய்து, விதிமுறை மீறல் கண்டறியப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்க, போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் பாதிக்கப்பட்ட கிரிதரன், அவரது மனைவி பவித்ரா, ஆகிய இருவரும், அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில், அடுத்த இரண்டு நாட்கள் கண்காணிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement