காவூர் சாலை படுமோசம் சீரமைப்பது எப்போது?
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டை பாலாற்று மேம்பாலம் அருகே துவங்கி, காவூர் செல்லும் 2 கி.மீ., துாரமுடைய ஒன்றிய சாலை உள்ளது. காவூர், காவிதண்டலம் உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி செல்கின்றனர்.
கடந்தாண்டு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் பாலாற்று பாலம் சீரமைப்பு பணி நடந்தது. அப்போது, நெடுஞ்சாலையில் பயணித்த அனைத்து வாகனங்களும், காவூர் கிராம சாலை வழியாக செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு மாற்றி விடப்பட்டது.
காவூர் கிராம சாலை வழியாக அளவுக்கு அதிகமான வாகனங்கள் இயங்கியதால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இச்சாலை குறுகியதாக இருப்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட இயலாமல், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, காவூரில் இருந்து ஒரக்காட்டுப்பேட்டை மேம்பாலம் வரையிலான ஒன்றிய சாலையை சீரமைத்து, அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.