டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்: செந்தில் பாலாஜி மீது போலீசில் அ.தி.மு.க., புகார்
சென்னை: தமிழக மின்வாரியத்திற்கு, 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய, 'டெண்டர்' விட்டதில், 397 கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீது, அ.தி.மு.க., சார்பில், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலர் நிர்மல்குமார் அளித்துள்ள புகார்:
மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, 2011 - 2023ம் ஆண்டு வரை, பல்வேறு திறனில், 45,800 மின்மாற்றிகள், 1,182 கோடி ரூபாயில் கொள்முதல் செய்ய, 10 டெண்டர்கள் விடப்பட்டன.
அவற்றில், 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, ஊழல் நடந்துள்ளது.
அதாவது, 500 கிலோ வாட் திறனுடைய, 800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய, 2021, நவம்பரில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில், 26 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக, 13 லட்சத்து, 72 ஆயிரத்து, 930 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, அதற்கான கொள்முதல் விலைப்பட்டியலை ஒப்படைத்துள்ளனர்.
டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள், வெவ்வேறு விலைப்பட்டியலை ஒப்படைப்பர். அதில் எது குறைவோ, அது டெண்டரில் இறுதி செய்யப்படும். ஆனால், 26 பேரும் ஒரே விலைப் பட்டியலை சமர்ப்பித்திருப்பது, கூட்டு சதிக்கு உடன்பட்டு இருப்பதை அம்பலப்படுத்துகிறது.
ஒரே மாதிரியான விலைப்பட்டியல் இருப்பதால், டெண்டர் ஆய்வுக்குழு அவற்றை ரத்து செய்திருக்க வேண்டும்.
மாறாக, 12 லட்சத்து, 49 ஆயிரத்து 800 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்து, 26 பேரில், 16 பேரை இறுதி செய்து, தலா 50 என, 800 மின்மாற்றிகள், 99.98 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அந்த மின்மாற்றி ஒன்றின் விலையே, 7 லட்சத்து, 89 ஆயிரத்து, 750 ரூபாய்தான்.
அதாவது, 800 மின்மாற்றிகளையும், 63.18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க முடியும்.
இந்த மின்மாற்றிகள் கொள்முதல் செய்த காலக்கட்டத்தில், ராஜஸ்தான் அரசு, 500 மெகாவாட் திறன் உடைய மின்மாற்றிகளை, இந்த விலைக்குதான் வாங்கி உள்ளது.
எனவே, செந்தில் பாலாஜி மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என, கூட்டுசதி செய்து, வெறும், 800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததிலேயே, அரசுக்கு, 34 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில், ஏழு டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, ஊழல் நடந்துள்ளது.
இதன் பின்னணியில், செந்தில் பாலாஜி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.