புறநகரில் அதிகரிக்கும் பேனர்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
மறைமலை நகர்:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், புறநகர் பகுதிகளான பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், பேரமனுார், கீழக்கரணை, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், பேனர்கள் அதிகரித்துள்ளன.
அரசியல் கட்சி விளம்பரங்கள், திருமண நிகழ்ச்சி என, பல தரப்பட்ட நிகழ்வுகளுக்கும், நெடுஞ்சாலை ஓரங்களில் பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
புறநகர் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலை இருபுறமும் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில், விதிகளை மீறி பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்கிறது.
கல்வி நிலையங்கள் உள்ள இடங்களில், 20 அடி உயரம் வரை கட் அவுட்கள் வைக்கப்படுகின்றன. தற்போது, மழைக்காலம் துவங்கி, பலத்த காற்று வீசும் நேரங்களில், எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற அச்ச உணர்வுடன் செல்லும் நிலை உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, புறநகரில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.