தமிழ் கல்வெட்டு படிகள் மீண்டும் மைசூரு செல்கிறதா?

சென்னை:மைசூரில் இருந்து, தமிழகத்துக்கு எடுத்து வந்த தமிழ் கல்வெட்டு படிகள், மீண்டும் மைசூருக்கே எடுத்துச் செல்லப்பட உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர், 1861ல் மத்திய தொல்லியல் துறையை பெங்களூரில் உருவாக்கினார். அதற்கு அடுத்த ஆண்டு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரான சென்னைக்கு மாற்றினார்.

பாதுகாப்பது கடினம்



தொடர்ந்து, சென்னை மாகாணத்தில் இருந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்து, அவற்றின் மைப்படிகளை சேகரித்தார். அவற்றை சென்னையின் தட்ப வெப்பநிலையில் பாதுகாப்பது கடினமாக இருந்தது.

அதனால் 1903ல் ஊட்டிக்கு மாற்றினார். பின், 1966ல் அவை மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த, 60,000க்கும் மேற்பட்ட கல்வெட்டு படிகளும், செப்பு பட்டயங்களும் இருந்தன.

இந்நிலையில், கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி பிரச்னை உருவானபோது, அங்கிருந்த கல்வெட்டு படிகளை ஆய்வு செய்யச் சென்ற தமிழக அறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவை சிதைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, அவற்றை தமிழகத்தில் பாதுகாக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கடந்த 2022ல், 17,000 தமிழ் கல்வெட்டு படிகள் மட்டும், சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இங்கு எடுத்து வரப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும், அவற்றை பாதுகாக்க, 'ஏசி' அறை வசதியோ, கூடுதலாக தொழில்நுட்ப பணியாளர்களோ, கல்வெட்டு ஆய்வாளர்களோ நியமிக்கப்படவில்லை.

45 லட்சம் ரூபாய்



அவை மடித்து வைக்கப்பட்ட நிலையில் பெட்டிகளிலேயே உள்ளன. சென்னையின் வெப்பத்தில் அதிக காலம் இருந்தால், மைப்படிகள் சிதைந்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மைப்படிகளை மீண்டும் மைசூருக்கே எடுத்துச் செல்ல உள்ளதாகவும், அதைத் தடுத்து நிறுத்தி, தமிழக அரசே அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவால் தான், தமிழ் கல்வெட்டு படிகள் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளன. அவை மீண்டும் மைசூருக்கு மாற்றப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையில் உண்மையில்லை. கல்வெட்டு படிகளை துறை வாரியாக பிரித்து, நகரும் பாதுகாப்பு பெட்டகங்களில் அடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டகம் வாங்க, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் நிலையில், மத்திய அரசு, 45 லட்சம் ரூபாய் ஒதுக்க சம்மதித்துள்ளது. அதற்கான அளவீட்டு பணிகள் முடிந்துள்ளன. விரைவில், கல்வெட்டுகளின் மைப்படிகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement