சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

புதுச்சேரி: வழுதாவூர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக, விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வரும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடைகளை தாண்டி முகப்பு கூரைகள், விளம்பர போர்டுகளை வைத்துள்ள வியாபாரிகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கலெக்டர் குலோத்துங்கன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி, புதுச்சேரி முழுதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

நேற்று காலை வழுதாவூர் சாலை, ராஜிவ் சிலை முதல் மேட்டுப்பாளையம் சந்திப்பு வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, நகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அகற்றினர்.

பொக்லைன் இயந்திரம் உதவியுடன், சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், விளம்பர போர்டுகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு பொருட்களை நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement