சிறுமலையில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்

திண்டுக்கல்:திண்டுக்கல் சிறுமலையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகளை கட்டுப்படுத்த வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலையில் உள்ளனர்.

திண்டுக்கல் அருகே 30 கி.மீ., துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்குள்ள குளிர், சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான பயணிகள் தினமும் வருகின்றனர். தென்மலை, பழையூர், புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்கு விளையும் பலா, வாழை அதிக ருசி உள்ளவை. சிறுமலை வனப்பகுதிகளில் அதிகம் காட்டுமாடுகள், காட்டுப்பன்றிகள் உள்ளன.

இவை அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. வனத்துறை சார்பில் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.

மேலும் கொய்யா, சீத்தாபழம், மிளகு சாகுபடியும் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கு அதிகம் விளைவதால் இவைகளையும் காட்டுமாடுகள் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலையில் உள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளிலும் திரியும் காட்டு மாடுகள் எதிரே வரும் வாகனங்களை குண்டு கட்டாக துாக்கியடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

வனத்துறையினர் செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மற்ற எங்கும் அவர்களை பார்க்க முடியாது.

காட்டுமாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எந்த பணிகளிலும் வனத்துறை நிர்வாகத்தினர் ஈடுபடாமல் இருப்பது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

சிறுமலை விவசாயி விக்னேஷ் கூறியதாவது: வனவிலங்குகள் வருகையை தடுக்க விவசாய தோட்டங்களை சுற்றி வனத்துறை அனுமதி பெற்று சோலார் மின்வேலி அமைக்கப்படுகிறது.

சோலார் மின்வேலிக்கு அனுமதி பெறும் வழிமுறைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement