கண்காட்சியில் கவனம் ஈர்த்த ரூ.23 கோடி மதிப்பு எருமை
மீரட்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கில் என்பவர், 'அன்மோல்' எனும் ஆண் எருமையை வளர்த்து வருகிறார். வழக்கமான எருமைகள் போல் அல்லாமல் பிரமாண்டமான உடல், மினுமினுப்பான தோலுடன் பார்ப்பவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் இதன் தோற்றம் உள்ளது.
ராஜஸ்தானில், கடந்த 9ல் துவங்கி நேற்றுடன் முடிந்த புஷ்கர் திருவிழாவில், அன்மோல் எருமையை கில் காட்சிப்படுத்தினார்.
எருமையின் உரிமையாளர் கில் கூறியதாவது:
அன்மோலுக்கு தினசரி, 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளை, 5 லிட்டர் பால் மற்றும் 20 முட்டை, பசும் புல், கேக், நெய், சோயாபீன்ஸ், சோளம் ஆகியவற்றை தீவனமாக தருகிறேன்.
அதன் தோல் மினுமினுப்பாக இருப்பதற்காக பாதாம் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் கலந்த கலவையை பயன்படுத்துகிறேன். இதற்காக தினமும் 1,500 ரூபாய் செலவிடுகிறேன்.
இதன் சிறப்பான தோற்றத்தால், கால்நடை வளர்ப்போர் அன்மோல் எருமையின் விந்துவை இனப்பெருக்கத்திற்காக போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
இதற்காக வாரம் இருமுறை எருமையிடம் இருந்து விந்தணு பிரித்தெடுக்கப்படுகிறது. அது நுாற்றுக்கணக்கான மாடுகளுக்கு பயன்படுகிறது. இதன் வாயிலாக, மாதம் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது.
இந்த எருமையை, 23 கோடி ரூபாய் தந்து வாங்கவும் ஆள் இருந்தனர். ஆனால் இது எங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகிவிட்டது; விற்கும் எண்ணம் வரவில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.