நிலம் அபகரிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை
சென்னை, சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் சுந்தர், 57. அவருக்கு, சுரேஷ்குமார் என்பவர், 2009ல், அய்யப்பன்தாங்கல் மற்றும் வேளச்சேரியில் உள்ள நான்கு காலி மனைகளை, 51 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். வில்லங்க சான்று பார்த்தபோது, அது வேறு நபர்களுக்கு சொந்தமானது என, தெரியவந்தது.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுந்தர் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப் பிரிவு போலீசார், சுரேஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர், போலி ஆவணம் வாயிலாக நிலத்தை அபகரித்து, சுந்தருக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில், தகுந்த சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சுரேஷ்குமாருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.