பயங்கரவாத செயலுக்கு ஆள் சேர்ப்பு ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை:தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு, ஆள் சேர்த்து, சதி திட்டம் தீட்டிய, ஆறு பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சென்னை, ராயப்பேட்டையை் சேர்ந்த, அண்ணா பல்கலை முன்னாள் கவுரவப் பேராசிரியர் ஹமீது உசேன்,45, அவரது தந்தை அகமது மன்சூர், 56, சகோதரர் அப்துல் ரஹ்மான்,33, ஆகியோர், தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' அமைப்புக்கு ஆள் சேர்த்து, சதி திட்டம் தீட்டி வந்தனர்.
அவர்களுக்கு, சென்னையை சேர்ந்த, முகமது மாரீஸ்,36, காதர் நவாஸ் ெஷரீப்,35, அகமது அலி உமரி,46 ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இவர்களை, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆறு பேர் மீதும், சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
ஹமீது உசேன் உள்ளிட்ட ஆறு பேரும், தமிழகத்தில் உள்ள, அப்பாவி முஸ்லிம்களை, மூளைச் சலவை செய்து, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து, அவர்களுக்கு சதி திட்டம் குறித்து பயிற்சி அளித்துள்ளனர். இந்தியாவில், 'கிலாபத்' என்ற முஸ்லிம் ஆட்சியை நிறுவுவதே இவர்களின் நோக்கம். அதற்காக, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பின் நிறுவனர் ேஷக் தாகி அல் தின் அல் நபானியின் பயங்கரவாத கருத்துக்களை, முஸ்லிம் இளைஞர்களிடம் பரப்பி வந்தனர்.
மேலும், மதத் தலைவர்கள், உலமாக்கள், இமாம்களுடன், பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது தொடர்பாக, கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இவர்கள் ஆறு பேரும், பாகிஸ்தானில் உள்ள, தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்தனர். அந்நாட்டு ராணுவத்துடன் ரகசிய தொடர்பிலும் இருந்துள்ளனர். காஷ்மீர் பிரிவினை வாதம் குறித்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
ஆறு பேருக்கும் தாங்கள் செய்வது குற்றம் என தெரிந்தே, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.