சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆவடி, சென்னை ---- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், ஆவடி கவரைப்பாளையம் முதல் பட்டாபிராம் இந்து கல்லுாரி ரயில் நிலையம் வரை, பழம், காய்கறி, இளநீர் விற்பனைக் கடைகள், டிபன் கடைகள் என, 60க்கும் மேற்பட்ட கடைகள், சாலையோரத்தை ஆக்கிரமித்துள்ளன.
குறிப்பாக, கவரைப்பாளையம் டி.ஆர்.ஆர்., நகர் அருகே, 10க்கும் மேற்பட்ட கார்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுகின்றன. அதன் அருகே ஹார்டுவேர்ஸ் கடைக்காரர், சாலையோரத்தில், 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்'களை அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, மார்ச் 8ல், சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
சில தினங்களில் மீண்டும் அங்கு சாலையோர கடைகள் முளைத்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு மாதங்கள் ஆகியும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர்.
சாலையோர வியாபாரிகளின் பின்புலத்தில் அரசியல் கட்சியினர் ஆதரவு இருப்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை காலி செய்யும்படி, உரியவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், யாரும் அகற்றிக் கொள்ள முன் வராததால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று, போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்புக்களை அகற்றினர்.
சாலையோரத்தில், 3 கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமித்து இருந்த சாலையோர கடைகள், விளம்பர பாதாகைகள், தகர தட்டிகள், கூரைகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் எனக்கூறிய அதிகாரிகள், அடுத்த முறை பாரபட்சம் பார்க்காமல், மொத்தமாக இடித்துவிடுமோம் என, எச்சரித்தனர்.
ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.