மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம்
புழல்,புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றனர். மொத்தம் 25 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் உதவித்தொகை கோரி 11, வாகனம், தையல் இயந்திரம் கோரி தலா மூன்று, வேலை, வீடு, மருத்துவ உபகரணம், ரேஷன் அட்டை, தொழில்கடன், பட்டா கோரி தலா ஒன்று என மனுக்கள் வழங்கப்பட்டன.
இதுபோன்ற முகாமை வாராவாரம் நடத்த வேண்டும் என்றும், இதுபோன்ற முகாமை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தவும் மாற்றுத்திறனாளிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், முகாம் குறித்த அறிவிப்பும் போதிய அளவில் செய்யாததால், பயனாளிகள் முகாமை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.