'ஆன்லைன்' மணல் விற்பனை நிறுத்தம்: ஒப்பந்ததாரர் மாற்றம் காரணமா?

சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' முறையில் மணல் விற்பனைக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரை மாற்றுவது தொடர்பான பிரச்னையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில், 2021ல் காவிரி, கொள்ளிடம், கொசஸ்தலையாறு உள்ளிட்ட, 29 இடங்களில் குவாரிகளை திறக்க திட்டமிட்டு, முதல் கட்டமாக, 12 குவாரிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே அமலில் இருந்த, 'ஆன்லைன்' மணல் விற்பனை திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டது.

முன்பதிவு

இதன்படி, பொது மக்கள் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து, மணல் பெற வழி ஏற்பட்டது. புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மூன்று பேர், குவாரிகளில் இருந்து யார்டுகளுக்கு மணல் எடுத்து வரும் ஒப்பந்தங்களை பெற்றனர்.

மணல் விற்பனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடப்பதாக, அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து, இந்த ஒப்பந்ததாரர்கள் தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தியது.

இதில், 4,730 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 12 குவாரிகளும் மூடப்பட்டன.

இதனால், மணல் விற்பனை மொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டதால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட சில குவாரிகள் வாயிலாக மட்டும் மணல் விற்பனை செய்யப்பட்டது.

குவாரிகள் எண்ணிக்கை குறைந்ததால், 'ஆன்லைன்' முறையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமே முன்பதிவு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, வெள்ளிக்கிழமை முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக, இதற்கான இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:

கட்டுமான பணியில் பல்வேறு நிலைகளில், 'எம் - சாண்ட்' பயன்பாடு அதிகரித்தாலும், குறிப்பிட்ட சில வேலைகளுக்கு ஆற்று மணல் அவசியமாகிறது.

அமலாக்க துறை சோதனைக்கு பின், ஒருசில குவாரிகள் வாயிலாக மட்டுமே மணல் வழங்கப்பட்டு வந்தது.

இதில் ஏற்கனவே இருந்தவர்களில் சிலரை தவிர்த்து, புதிய ஒப்பந்ததாரர்களை நியமிக்க பேச்சு நடந்து வருகிறது. அதனால், பழைய ஒப்பந்ததாரர்களை வெளியேற்றுவதற்காக, மணல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement