729 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் கைத்தறி துறை அமைச்சர் வழங்கினார்

காஞ்சிபுரம்:'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டம், தமிழக அளவில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரியலுார் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு தொடக்கப் பள்ளியில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இதில், அமைச்சர் காந்தி பேசியதாவது:

தற்போது, மாநிலம் முழுதும் 76,705 தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 729 தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து பெற வேண்டும் என்பதற்காக, ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் அரசுடன் இணைந்து குடும்பத்தினரும் அதிக கவனத்துடன் பராமரிக்க மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான வளமான மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement