சூணாம்பேடு ரேஷன் கடைக்கு ரூ.10 லட்சத்தில் புது கட்டடம்
சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், 40 ஆண்டுகளாக நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இதில், 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
பழுதடைந்த கட்டடத்தில், நியாய விலை கடை செயல்பட்டு வந்ததால், நாளடைவில் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மோசமான நிலையில் இருந்தது.
இதனால், மழைக் காலத்தில் மேல் தளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்து வந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, அதே இடத்தில் கட்டடம் கட்ட முடிவானது.
கடந்த மே மாதம் துவங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், முழுதும் முடிந்து, தற்போது கட்டடம் துவக்க விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.