கடப்பாக்கம் சாலை விரிவாக்கம் 25 ஆண்டாக போராடும் மக்கள்
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், ஆலம்பரைகுப்பம் கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., நீளம் கொண்ட தார் சாலை உள்ளது.
இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதுவே, கடப்பாக்கம் குப்பம், முருக்கங்காடு, ஆலம்பரை தண்டுமாரியம்மன் குப்பம், ஆலம்பரை ஊத்துக்காட்டு அம்மன் குப்பம், காசிபாட்டை உள்ளிட்ட, 8 கிராம மக்களின் பிரதான சாலையாகும்.
இப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், நுாலகம், அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், மருத்துவமனை, மீன் மார்க்கெட், பெட்ரோல் பங்க், துணை மின் நிலையம், வங்கி போன்றவை செயல்படுகின்றன.
மேலும், கடப்பாக்கத்தில் உள்ள கடற்கரை மற்றும் ஆலம்பரைக்கோட்டையை சுற்றிப்பார்க்க, சுற்றுலாப் பயணியரும் வந்து செல்கின்றனர். ஆகையால், தினசரி நுாற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, 10 அடி அகலம் மட்டுமே உள்ளதால், கார், வேன், பேருந்து ஆகியவை சென்றுவர கடினமாக உள்ளது.
மேலும், முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயற்சி செய்யும்போது, அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் கூறியதாவது:
கடப்பாக்கத்தில் இருந்து ஆலம்பரைக்குப்பம் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். தற்போது வரை, சாலையை விரிவாக்கம் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.