வாலிபரை கடத்திய வழக்கில் மூவருக்கு சிறை
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அடுத்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன், 23. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள யு.கே.பி., என்ற கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஆந்திரா மாநிலம் அழகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுதா, 28, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ராமராஜன், சுதாவிடம் வாங்கிய கம்மலை 3,500 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். கம்மலை திருப்பி தராமல் ஆறு மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.
தகவல் அறிந்த சுதாவின் சகோதரர் அஜித், தன் நண்பர்களுடன் அக். 29ம் தேதி இரவு திருவள்ளூருக்கு காரில் வந்து தொழிற்சாலை பேருந்தில் பணி முடிந்து வந்த, ராமராஜனை பூண்டி அடுத்த புதுார் பகுதியில், பேருந்தை வழி மறித்து காரில் கடத்தி சென்றனர்.
தொழிற்சாலை பேருந்து டிரைவர் அளித்த தகவலின்படி புல்லரம்பாக்கம் போலீசார் ராமராஜனின் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. 30ம் தேதி ராமராஜனை மீட்டனர்.
ராமராஜனின் தாய் தேவி அளித்த புகாரின்படி ராமராஜனை கடத்திய ஆந்திர மாநிலம் பிச்சாட்டுர் பகுதியைச் சேர்ந்த அஜீத், 30, அரவிந், 24 மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 21 ஆகிய மூவரை நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.