பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ள பிளமிங்கோ பறவைகள்
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக இரை தேடும் அழகை சுற்றுலா பயணியர் ரசித்து வருகின்றனர்.
பழவேற்காடு ஏரி என்பது தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியை இணைத்தபடி, 481 சதுர, கி.மீ., பரப்பு கொண்ட பரந்து விரிந்த ஏரியாகும். அந்த ஏரியின் சதுப்பு நில பகுதிகள், பறவைகள் இரை தேட தோதுவாக இருப்பதால், சுமார், 100 வகையான பறவைகள், பழவேற்காடு ஏரியை வசிப்பிடமாக கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயத்தில், பழவேற்காடு ஏரியும் ஒன்றாகும்.
பல வகையான பறவைகள் இருந்த போதும், ‛கிரேட்டர் பிளமிங்கோ' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெரும் பூநாரை, காண்பவர்களை கவரும் பறவை இனமாகும். ஆப்ரிக்கா, மத்திய கிழக்கத்திய நாடுகள், இந்திய துணை கண்டம், தெற்கு ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இவ்வகை பறவைகள், ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியவை.
செந்நிறம் கலந்த வெண் நிற உடலும், நீண்ட சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் கொண்டவை. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் இடம் பெயர்ந்து தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப, சதுப்பு நில பகுதிகளில் இரை தேடி செல்வது வழக்கம். மனித நடமாட்ட பகுதியில் இருந்து வெகு தொலைவில், ஒரே இடத்தில் கூட்டமாக இரை தேடும் வழக்கம் கொண்ட பறவை இனம்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் அமைந்துள்ள, பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக இரை தேடுவதற்காக முகாமிட்டுள்ளன. வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தி இரை தேடும் அழகு, காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பைனாகுலர் வாயிலாக பிளமிங்கோ பறவகள் இரை தேடும் அழகை சுற்றுலா பயணியர் ரசித்து வருகின்றனர்.