குடிநீர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பாததால்...கவலை!:தீவிரம் அடையாத வடகிழக்கு பருவமழை
சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, ஏரிகளில் தண்ணீர் நிரம்பாவிட்டால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாகவும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாகவும் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி., சென்னைக்கு ஒரு மாதத்திற்கு, 1 டி.எம்.சி.,குடிநீர் தேவை.
சென்னை குடிநீர் வாரியம் வினியோகிக்கும் குடிநீரை, பெரும்பாலான சென்னைவாசிகள் குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. துணி துவைப்பது, குளிப்பது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படும் சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரையே, குடிக்க பயன்படுத்துகின்றனர். கேன் குடிநீரை சென்னைவாசிகள் பயன்படுத்தாத பட்சத்தில், ஒரு மாத குடிநீர் தேவை 2 டி.எம்.சி.,க்கு மேல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்தமாக 6.06 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 9.57 டி.எம்.சி., நீர் இருந்தது. கடந்தாண்டு நீர் இருப்பைவிட தற்போது, நீர் இருப்பு 3.50 டி.எம்.சி.,க்கு மேல் குறைவாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை வாயிலாக, இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்க வேண்டும். ஆனால், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், குடிநீர் ஏரிகள் இன்னும் நிரம்பாமல் நீர்இருப்பு கவலைக்கிடமாக உள்ளது.
தற்போதுள்ள நீரை வைத்து, அடுத்தாண்டு கோடை கால குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், நீர் இருப்பு குறைவாக உள்ளதால், கோடை கால குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், நீர்வளத்துறையினர், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பருவமழை காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் 1 டி.எம்.சி., அளவிற்கு நீர் தேக்காமல் காலியாக வைக்கப்படும். அதன்பிறகு வரும் நீர், உபரியாக வெளியேற்றப்படும்.
நடப்பாண்டு பருவமழை அதிகமாக பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் பாதி முடிந்தும், இன்னும் பருவமழை தீவிரம் அடையவில்லை.
இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டு ஏரிகளில் உபரிநீர் திறப்பது சந்தேகம்தான். டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் இருப்பதால், அதற்குள் ஏரிகள் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த நீர் பூண்டி ஏரிக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்படுகிறது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையும் தீர்க்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு முறைப்படி வழங்குவது கிடையாது. கடந்தாண்டு, 2.41 டி.எம்.சி., மட்டுமே நீர் திறக்கப்பட்டது. நடப்பு 2024 - 25ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில் 1.23 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் எல்லையை கடந்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 219 கனஅடி நீர் கிடைத்தது. இதில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைநீரும் அடக்கம்.
ஏரி மொத்த கொள்ளளவு நீர்இருப்பு (டி.எம்.சி.,)பூண்டி 3.23 0.46புழல் 3.30 2.40சோழவரம் 1.08 0.11செம்பரம்பாக்கம் 3.64 1.88தேர்வாய்கண்டிகை 0.50 0.30வீராணம் 1.46 0.89
சென்னையின் குடிநீர் தேவையை கருதி எடுக்கப்பட்டு வரும்
நடவடிக்கைகளின் கீழ், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில், 4276.44
கோடி ரூபாய் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாநகரின்
நீண்ட நாள் குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருதி,
பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜப்பான் பன்னாட்டு
கூட்டுறவு முகமை நிதியுதவுடன், பேரூரில் 4,276.44 கோடி ரூபாய் மதிப்பில்,
தினமும் 40 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள்
நடந்து வருகிறது. இதற்கான கட்டுப்பான பணிகள் முழு வீச்சில் நடந்து
வருகிறது.
இப்பணிகளைகுடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய் நேற்று ஆய்வு
செய்தார். கடல்நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, செதிலடுக்கு தொட்டி, சவ்வூடு
வெளியேற்றும் தெளிந்த நீர் தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீர்
சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் சேகரிப்பு தொட்டி, கசடுகளை
கெட்டிப்படுத்தும் தொட்டி, நிர்வாக கட்டடம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள்
நடந்து வருகின்றன.மேலும், கடல் நீரை குடிநீராக்க, கடலுக்குள் 1.15 கி.மீ.,
நீளத்திற்கு குழாய் பதிக்கப்படுகிறது. அத்துடன், இந்நிலையத்தில் இருந்து
போரூர் வரை 59 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்படும்.
இத்திட்டத்தில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள், சென்னை அருகாமையில் உள்ள,
20 ஊராட்சி பகுதிகளில், 22.67 லட்சம் மக்கள் பயனடைவர்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.