பழங்குடியினர் தின விழா கொண்டாட்டம் காணொலியில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் கவுரவ தின விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.

பகவான் பிர்சா முண்டா கடந்த, 1875ம் ஆண்டு, நவ., 15ம் தேதி, ராஞ்சி மாவட்டத்தில், உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். தனது, 19,வயதினிலே, அதி தீவிர சுதந்திர போராட்ட வீரர் ஆனார். அவரை தார்தி அபா என்று மக்கள் அன்போடு அழைத்தனர்.

தார்தி அபா என்றால், மண்ணின் தந்தை என்று பொருள். கடந்த 1899ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து பேராடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 1900 ஜூன், 9ம் தேதி அவர் காலரா நோயால் இறந்ததாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.

அவரை இன்று வரை பழங்குடியின மக்கள் கடவுளாகவே வழிபடுகின்றனர். அவர் பிறந்த தினம், பழங்குடியினர் கவுரவ தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், பழங்குடியினர் கவுரவ தின விழாவை ஒவ்வொரு ஆண்டும், நவ., 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் பகவான் பிர்சா முண்டாவின், 150வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று தர்மாபுரி, ஸ்ரீராம் திருமண நிலையத்தில் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பிரதமர் மோடி, காணொலி வாயிலாக பங்கேற்றார். விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement