அரசு மருத்துவமனையில் நடைமுறைப்படுத்துவதில் 'டேக்' சாத்தியமா ; நோயாளிகளின் உறவினர்களுக்கு 'பாஸ்' தொடருது

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் நோயாளிகளின் உறவினர்களின் கையில் 'டேக்' கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது:



மதுரை அரசு மருத்துவமனையில் தினசரி உள்நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் 3500 ஐ தாண்டுகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு உதவுவதற்காக 3க்கு மேற்பட்ட உறவினர்கள் வார்டுக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர்.

இவர்களை கட்டுப்படுத்துவது சவாலான விஷயம். தற்போது வரை தீவிர விபத்து பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் உறவினர்களுக்கு தலா 2 'பாஸ்கள்' வழங்குகிறோம்.

ஒருவர் வீடு செல்லும் போது மற்றவர் பார்த்துக் கொள்வதற்காக 2 பாஸ் வழங்குகிறோம். மற்ற வார்டு நோயாளிகளுக்கு ஒரு பாஸ் தருகிறோம். அதைக் கொண்டு உறவினர்கள் மாறி மாறி வார்டுக்குள்ளே செல்கின்றனர். கையில் 'டேக்' கட்டினால் அதை கழட்டி இன்னொருவருக்கு கொடுக்க முடியுமா என்பதை 'டேக்' வாங்கி பயன்படுத்தி பார்த்தால் தான் தெரியும்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாஸ் வழங்கும் முறையை செயல்படுத்த வாய்ப்புஉள்ளதா என ஆய்வு செய்துள்ளோம். நிலைய மருத்துவ அலுவலர்கள், வார்டு டாக்டர்களிடம் கலந்து பேசிய பின் 'டேக்' தயாரிப்பவரிடம் எங்களது தேவையை சொல்ல வேண்டும். அதுவரை 'பாஸ்' வழங்கும் நடைமுறை தொடரும் என்றார்.

Advertisement