ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்டம் மாநில ஆணைய தலைவர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட தொழில் மையம், சிட்கோ, தாட்கோ சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கிய விவரம் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், ஆதிதிராவிட நலத்துறையில் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம், விடுதி நிர்வாகம் குறித்தும், கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், ஆணைய துணைத் தலைவர் புனிதபாண்டியன், எஸ்.பி., தீபக் சிவாச், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஆணைய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.