சிரியாவில் திடீர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 15 பேர் பரிதாப பலி
டமாஸ்கஸ்: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய திடீர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த அக்.,மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த நாடுகளில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய திடீர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வடக்கு லெபனானின் எல்லைக்கு அருகில் உள்ள சிரியாவின் தென்மேற்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வந்தது. இந்த சூழலில் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.