கோவையில் கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்; குஜராத்தில் கைது 

கோவை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சிலர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். அந்த வீடுகளை குறிவைத்து டவுசர் கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.

கோவை, பீளமேடு பகுதியில் ஒரு வீட்டில் சுமார் 60 சவரன் நகை உட்பட, நான்கு வீடுகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கினர். முதற்கட்டமாக சி.சி.டி.வி., கேமிரா பதிவுகளை பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் கேட்டை ஏறி குதித்து பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் இருந்தன.

மேலும் அவர்கள் டவுசர் மட்டும் அணிந்து, முகத்தை துணியால் மறைத்திருந்தது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் குறித்து விசாரித்த போது, குஜராத் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் குஜராத் மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு, தாஹோத் என்ற பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சென்ற போலீசார், மன்டோட் காஜூபாய், 34, மேதா நன்னுபாய், 50 மற்றும் மன்டோட் ரமேஷ்பாய், 41 ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவைக்கு ரயிலில் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து, நவ.,1ம் தேதி கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட வலியாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து 118 பவுன் தங்கம், 75 கேரட் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement