தமிழகம், புதுச்சேரியில் 21 வரை மழை நீடிக்கும்

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வரும் 21 வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இத்துடன், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவிழந்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 21 வரை நீடிக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேர மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கன மழைக்கான வானிலை அறிவிப்பு இல்லாத நிலையில், கடந்த மூன்று நாட்களாக, இரவு நேரத்தில் மட்டும் மழை பெய்து வருகிறது. இரவு 11:00 மணிக்கு மேல் துவங்கும் மழை, அதிகாலை வரை நீடிக்கிறது.

இதுகுறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தமிழக வெதர்மேன் தளத்தில் கூறியுள்ளதாவது:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இரவில் துவங்கி அதிகாலை வரை மழை பெய்கிறது. வடகிழக்கு பருவ மழையில், இது ஒரு நல்ல மாற்றமாக அமைந்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும் வகையில், இந்த மழை அமைந்துள்ளது. இந்நிலை, நாளை வரை தொடர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement