நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி
நாகமலை : வடபழஞ்சி ஊராட்சியில் 40 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதி கழிவுநீரை சேகரிக்க மதுரை காமராஜ் பல்கலை - திருப்பரங்குன்றம் மெயின் ரோடு, செந்தாமரை கல்லுாரி ரோடு சந்திப்பில் 20 க்கு 20 பரப்பளவில் ஊராட்சி சார்பில் கழிவுநீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. சில மாதங்களாகவே இதில் கழிவுநீர் நிரம்பி ரோட்டிலும் அருகிலுள்ள காலி மனையிலும் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சித் தலைவர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தேங்கிய நீரில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பும், ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் 6 அடி ஆழ பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீரை அகற்றி, தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.