மருத்துவமனை தீ விபத்து; உயர் மட்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவு

6


லக்னோ: மருத்துவமனையில் தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

உ.பி., மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். இதில் சில குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையின் வெளியே குழந்தைகளின் பெற்றோர் மன உடைந்து நிற்கும் வீடியோ காட்சிகள் கவலை அடைய செய்கிறது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.



இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 'இந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. காயம் அடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய ராமரை பிரார்த்தனை செய்கிறேன்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கடும் நடவடிக்கை





மருத்துவமனையில் உ.பி துணை முதல்வர், பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, பிறந்த குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்.

தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை அறிக்கை வந்த பின் தான் கூற முடியும். 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 3 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement