வடமாநில மாணவர்கள் 200 பேர் தமிழை தாய்மொழியாக எடுத்து அசத்தல்

15

ஓசூர்: தமிழக எல்லையில் உள்ள ஓசூர், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வட மாநில தொழிலாளர்களும் பிழைப்புக்காக ஓசூர் பகுதிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து, தொழிற்சாலைகள், கோழிப்பண்ணை, செங்கல்சூளைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


தற்போது வட மாநில தொழிலாளர்கள், அருகில் உள்ள அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். ஓசூர், பேடரப்பள்ளி மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் மொத்தம், 917 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அதில், பீஹார், ஒடிசா, அசாம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 1 முதல், 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.


இப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழியில் கல்வி தரப்படுகிறது. வட மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள், தமிழ் மொழியை விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளனர். சர்வ சாதாரணமாக தமிழ் பேசி வருகின்றனர்.


தினமும் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறளை ஒப்புவித்த பின் தான், வகுப்பறைக்கு செல்கின்றனர். வகுப்பறையில் உள்ளூர் மாணவர்களோடு அமர்ந்து, தமிழ் மொழியில் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து, நாளிதழ்கள் வாசிப்பு போன்றவற்றை பழக்கமாக கொண்டுள்ளனர்.


ஓசூர் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளை மெட்ரிக், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., போன்ற பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிகளில் சேர்த்து விடும் இந்த காலக்கட்டத்தில், வட மாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து, தமிழில் கல்வி கற்க ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள், வட மாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களை பள்ளியில் சேர்க்க முனைப்பு காட்டியதன் விளைவாக, வட மாநில குழந்தைகள், தமிழ் மொழி கல்வியை கற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


அதுமட்டுமின்றி இப்பள்ளியில் படித்த வடமாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவியரில், 15 பேர் மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்வாகி, 9 முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.


இதேபோல், பேகேப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும், வட மாநில குழந்தைகள் தமிழ் மொழி கல்வியை கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement