இதையாவது செய்யுங்க; வீடுகள் தோறும் மழை நீரை சேமிப்போம்; வறட்சி காலங்களில் உதவ வழி காணலாமே

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அணைகள், குளங்கள் நிரம்புவது வழக்கம். பருவ மழை மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாயம், குடிநீர் , தொழிற்சாலை ஆகியவற்றின் தேவைகளும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.


ஆனால் வறட்சி காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்று விடுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இயற்கையில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .இதை கருத்தில் கொண்டு ஆறுகள், ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. தனியார் கட்டடங்கள், வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்க 2005 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அரசு அலுவலக கட்டடங்கள், தனியார் வீடுகள், நிறுவனங்களின் கூரையில் இருந்து குழாய்களை அமைத்து தண்ணீரில் நிலத்தடியில் சேகரிக்க உறிஞ்சு குழிகள் அமைத்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.


ஆனால் தற்போது இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கடமைக்கு வைக்கப்பட்டதே தவிர முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்தும் தொட்டிகள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.


மழைநீர் தொட்டியில் வந்து விழுந்தாலும் பூமிக்கு அடியில் சென்று சேர முடியாத நிலை தான் உள்ளது . மழைநீர் அவசியத்தினை உணர்ந்து அரசின் நல்ல திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும். பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழைநீர் சேகரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.

Advertisement