இரு மாதங்களில் மயானம் செயல்படும்
தேவகோட்டை தேவகோட்டையில் நவீன தகன மயானம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் செயல்படாமல் உள்ளது. தற்போது இயங்கி வந்த மயானம் இடம் அருகில் உள்ள சித்தானுார் ஊராட்சியை சேர்ந்தது என்பதால் அவர்கள் பூட்டு போட்டு விட்டனர்.
தேவகோட்டை நகராட்சிக்கு சுடுகாடு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். இது தொடர்பாக தினமலர் இதழில் செய்தி வெளியானது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேதுநம்பு முன்னிலையில் அதிகாரிகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
நகராட்சி கமிஷனர் தாமரை, போலீசார், வருவாய்த்துறையினர் கம்யூ., நிர்வாகிகள் காமராஜ், சுப்பையா, சேவத்தாள், உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் கட்டிமுடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை இரண்டு மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என்றும், தற்போது உள்ள மயானத்தில் எப்போதும் போல தகனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டனர்.