தொடர் மழையால் அழுகிய வெங்காயம் இருப்பு வைத்த விவசாயிகள் ஏமாற்றம்
போடி : தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வெங்காயத்தில் அழுகல் ஏற்பட்டு வருவதால் இருப்பு வைத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
போடி அருகே விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், சிலமலை, காமராஜபுரம், தேவாரம், லட்சுமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். வெங்காயம் நடவு செய்த 60 நாட்களில் பலன் தரக்கூடியதாகும். விளைந்த வெங்காயம் அறுவடை செய்து மதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்,திருச்சி, மார்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படும். 2 மாதத்திற்கு முன் ஆந்திராவில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் குறைந்தது.
இதனால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலும் விலையும் அதிகரித்தது. கிலோ ரூ.30 முதல் 40 வரையும், தரம் பிரித்த வெங்காயம் கிலோ ரூ.50 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். சில்லறை விலையில் கிலோ ரூ.60 வரை விற்பனை ஆனது. மேலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைத்தனர்.
சமீபத்தில் பெய்த தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாறி பனிக்காற்று வீசுகிறது. இதன் காரணமாக இருப்பு வைத்த வெங்காயம் அழுகல் ஏற்பட்டும், முளை கட்ட துவங்கி உள்ளது. வெங்காயம் அமுகல் பாதிப்பால் இருப்பு வைக்க முடியாமல் சந்தைக்கு அனுப்புகின்றனர். சந்தையில் வரத்து அதிகரிப்பதால் சின்ன வெங்காயம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப் படுகிறது. விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. வெங்காயம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்து இருப்பு வைத்த விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.