தேவிகுளம் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கும் அபாயம் மக்கள் பட்டினி கிடக்க வாய்ப்பு

மூணாறு : ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் 114 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் அடிமாலியில் உள்ள பொது வினியோகத் துறை கோடவுனில் இருந்து கொண்டு வரப்பட்டு, கடைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களின் வாடகை தொகை கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை. அந்த வகையில் கோடி கணக்கில் நிலுவை ஏற்பட்டதால் பொருட்கள் கொண்டு வருவதை நிறுத்தி விட்டனர். தற்போது ரேஷன் கடைகளில் இருப்பு உள்ள பொருட்கள் மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் ஓரிரு வாரங்களில் முடிந்து விடும்.

தவிர ரேஷன் கடை நடத்துவோருக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேவிகுளம் தாலுகாவில் பெரும்பாலும் தோட்டங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவை சூழ்ந்ததாகும். தற்போது ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement