சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
உத்தரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்ட சிவன் கோயில்களில் நேற்று அன்னாபிேஷக விழா நடந்தது.
அரிசி என்பது வாழ்க்கை செழுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளம். நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. ஆகாயத்தில் இருந்து தோன்றிய காற்றின் உதவியுடன் நெருப்பை மூட்டி மண்ணிலிருந்து விளைந்த அரிசியை நீரில் வேகவைத்து பஞ்ச பூதங்களின் உதவியுடன் அன்னமாக்கி பஞ்ச பூதங்களையும் தன்வசம் இயக்கும் ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. நேற்று பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மூலவர் மங்களநாதருக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு பச்சரிசியால் சாதம் வடிக்கப்பட்டு அன்னத்தால் சாற்றப்பட்டது. பின்னர் காய்கறி, பழங்கள், இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விசேஷ தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிற வல்லியம்மன் கோயிலில் காலை 10:00 மணிக்கு மூலவர் பூவேந்திய நாதருக்கு 11 வகை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 30 கிலோ பச்சரிசி சாதம் மூலவருக்கு சாற்றப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னத்தை கால்நடைகளுக்கும், மீதமுள்ள பிரசாதம் மாரியூர் கடலில் கரைக்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டினர் செய்திருந்தனர்.
* சாயல்குடி அருகே டி.எம்.கோட்டை செஞ்சடை நாதர் சமேத கருணகடாட்சி அம்மன் கோயிலில் பச்சரிசி சாதம் திருமேனியில் சாற்றப்பட்டு காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை நாகநாத குருக்கள் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
* கீழக்கரை தட்டான் தோப்பு தெரு நாராயணசாமி கோயிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று அன்ன அபிேஷகம் நடந்தது.
சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமக்குடி
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு அண்ணாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து கும்ப ஸ்தாபனம், ஹோமங்கள் நிறைவடைந்து மகாபூர்ணாகுதி நடந்தது. மூலவர் சந்திரசேகர சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டார்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழாவில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
* நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமக்குடியில் பல்வேறு சிவன், அம்மன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.