சேதம் அடைந்த ஆடுவதை கூடம்
தேவாரம் : தேவாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே சகல வசதியுடன் கூடிய ஆடுவதை கூடம் பயன்பாடு இன்றி சேதம் அடைந்து உள்ளது.
இப்பேரூராட்சி பகுதியில் 3000 குடும்பங்கள் வசிக்கின்றனர். திறந்த வெளியில் ஆடுவதை செய்வதை தவிர்க்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் தேவாரம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் ரூ.10 லட்சம் மதிப்பில் மின் இணைப்பு, தண்ணீர் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டது. அக்கட்டடம் பயன்பாடு இன்றி சேதம் அடைந்துள்ளது. விஷப்பூச்சிகள் உலாவுவதால் அருகே குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதியை இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆடுவதை கூடம் இருந்தும் செயல்படாததால் பல இடங்களில் திறந்த வெளியில் ஆடுவதை செய்கின்றனர். இதனால் சகாதாரக்கேடு ஏற்படுகிறது. கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவாரம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.