ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க தொகை, போனஸ் வழங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கடமலைக்குண்டு : ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க தொகை, தீபாவளி போனஸ் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் கூறினர்.
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடமலைக்குண்டு திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், கலெக்டரின் வேளாண் துறை நேர்முக உதவியாளர் வளர்மதி, நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
சீனிராஜ், கொடுவிலார்பட்டி: தற்போது விவசாய பணிகள் துவங்கியுள்ள கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பொட்டாஷ், டி.ஏ.பி., கலப்பு உரங்கள் இருப்பு இல்லை என்கின்றனர். விவசாயிகளுக்கு உரங்கள் உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராசு,கடமலைக்குண்டு: விளைபொருட்களை எலிகள் சேதப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எலி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விதையில் துவங்கி வயலில் அறுவடை, கோடவுன் இருப்பு, விற்பனை மையங்களில் எலிகளால் 30 சதவீதம் உணவு பொருள் சேதம் ஆகிறது.
பாண்டியன், பெரியகுளம்: மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் மா சாகுபடி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பூக்கும் தருவாயில் பூச்சி தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை விஞ்ஞானிகள் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு காண வேண்டும்.
கலெக்டர் ஷஜீவனா : மா விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து அரசின் நடவடிக்கைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
துரைசுப்பிரமணியம், எஸ்.கதிர்நரசிங்கபுரம்: 1987 ல் எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்தில் தெப்பம்பட்டி, விருமானூத்து கண்மாய்களில் நீர் தேக்குவதற்கான திட்டம் துவக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆத்தங்கரைபட்டியில் இருந்து வரும் வருஷநாடு வைகை நீரை கால்வாய் மூலம் விருமானூத்து, தெப்பம்பட்டி உட்பட ஆண்டிபட்டி பகுதியில் மற்ற கண்மாய்களுக்கும் கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்ணன், தேனி: பால்வளத்துறை மூலம் விவசாயிகளுக்கு தீபாவளிக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை, போனஸ் வழங்கவில்லை. ஆவின், பால்வளத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு சேர வேண்டிய ஊக்கத்தொகை போனஸ் உடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்குச்சாமி, தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குழு தேனி மாவட்ட செயலாளர்: வருஷநாடு, ராஜபாளையம் பகுதிகளை வருஷநாடு கிழவன் கோயில் சாலை வழியாக இணைக்கும் ரோடு வசதி உள்ளது. இப்பகுதியில் 7 கி.மீ.,தூரம் வனப்பகுதியில் இருப்பதால் இந்த வழியாக போக்குவரத்து துவக்கப்படவில்லை. விருதுநகர், தேனி மாவட்டங்களை இந்த ரோடு மூலம் இணைப்பதால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாகும். இதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களை மயிலாடும்பாறை - மல்லப்புரம் ரோடு வழியாக இணைப்பதற்கும் நடவடிக்கை தேவை. இந்த இரு ரோடுகளும் செயல்பாட்டிற்கு வந்தால் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம் விவசாயம், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடையும். இதற்கான நடவடிக்கை தேவை.
புஷ்பம், கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியில் மலையை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்களை யானைகள் அழித்து வருவதால் விவசாயத்தை தொடர முடியவில்லை கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறியதாவது: இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது பல இடங்களில் வெடி வெடித்தும் இரவு முழுவதும் வனப் பணியாளர்கள் காவல் காத்தும் யானைகள் விரட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.