திருவையாறு காவிரி ஆற்றில் ஐப்பசி தீர்த்தவாரி புனித நீராடல்
தஞ்சாவூர் : தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில், ஆறுகளில் நீராடுவது புனிதமாக கருதப்படுகிறது. அதன்படி, ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான நேற்று, திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில், காவிரி ஆற்றில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அருகில் உள்ள ஐயாறப்பரை வழிபட்டனர்.
பின், தர்மசம்வர்த்தினி அம்மனுடன் ஐயாறப்பர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப மண்டப படித்துறையில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
நாகேஸ்வரன் கோவில்: இதுபோல, கும்பகோணத்தில் பெரியநாயகி அம்மன் சமேத நாகேஸ்வர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அஸ்திர தேவருடன், பஞ்ச மூர்த்திகள் சுவாமிகள் ரிஷப வாகனத்தில், கோவிலிருந்து புறப்பட்டு பிரதான வீதிகள் வழியாக காவிரி ஆறு பகவத் படித்துறைக்கு வந்தார். அங்கு, அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அங்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் தீர்த்தவாரியை கண்டருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் புனித நீராடி, 'நாகேஸ்வரா, நாகேஸ்வரா' என முழக்கமிட்டபடி, தரிசனம் மேற்கொண்டனர்.