விராத் கோலிக்கு நிகரா திலக் வர்மா: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு
ஜோகனஸ்பர்க்: 'டி-20' அரங்கில் இந்தியாவின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் திலக் வர்மா. அதிரடியாக விளையாடும் இவர், அனுபவ விராத் கோலியின் மூன்றாவது இடத்துக்கு பொருத்தமானவராக திகழ்கிறார்.
ஜோனஸ்பர்க்கில் நடந்த நான்காவது 'டி-20' போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா சதம் விளாச, இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடரை 3-1 என கைப்பற்றி, கோப்பை வென்றது.
தொடர் நாயகன்: இப்போட்டியில் இடது கை பேட்டரான இளம் திலக் வர்மா துணிச்சலாக ஆடினார். இவரை துவக்கத்திலேயே கட்டுப்படுத்த, இடது கை ஸ்பின்னரான மஹாராஜை அழைத்தார் கேப்டன் மார்க்ரம். இந்த ஓவரில் 2 இமாலய சிக்சர் அடித்தார் திலக். கடைசி கட்டத்தில் 'வேகப்புயல்' சிபமலா 'ஆப்-ஸ்டம்புக்கு' வெளியே சாமர்த்தியமாக வீசிய பந்தையும் (18.6) பவுண்டரிக்கு அனுப்பினார். இவரது ஒவ்வொரு 'ஷாட்'டும் வித்தியாசமாக இருந்தது. இதை பார்த்த போது, இளம் வயது கோலி நினைவுக்கு வந்தார். 'டி-20' அரங்கில் இருந்து கோலி ஓய்வு பெற்ற பின், அவரது 3வது இடத்திற்கு சரியான வீரரை இந்தியா தேடியது. ரிஷாப் பன்ட், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் என பலரும் களமிறக்கப்பட்டனர். இதில் சூர்யகுமார் ஓரளவுக்கு 'செட்' ஆனார். ஆனால், திலக் வர்மாவுக்காக தனது மூன்றாவது இடத்தை தியாகம் செய்தார். வரிசையாக இரு சதம் விளாசிய திலக், திறமை நிரூபித்தார். தென் ஆப்ரிக்க தொடரில் நான்கு போட்டியில் 21 பவுண்டரி, 20 சிக்சருடன் 280 ரன் (ஸ்டிரைக் ரேட் 198.58, சராசரி 140.00) குவித்தார். தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அடுத்த விராத் கோலியாக தன்னை அழுத்தமாக அடையாளம் காட்டியுள்ளார்.
சரியான நேரம்: இது குறித்து கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''முன்பு மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கோலி, இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்தார். இந்த பொறுப்பை இளம் வீரர் ஒருவர் ஏற்க சரியான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தேன். அதனால் தான் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தேன். செஞ்சுரியன், ஜோகனஸ்பர்க்கில் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினார். 'டி-20' மட்டுமல்ல இந்தியாவுக்காக அனைத்துவித கிரிக்கெட்டிலும் தொடர்ந்து முத்திரை பதிப்பார்,''என்றார்.
எதற்கும் தயார்: திலக் வர்மா கூறுகையில்,''ஜோகனஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் கெய்ல் (வெ.இ.,), டிவிலியர்ஸ் (தெ.ஆப்) போன்ற ஜாம்பவான்கள் ரன் மழை பொழிந்தனர். இதை சிறுவனாக 'டிவி'யில் பார்த்து இருக்கிறேன். இவர்களது வரிசையில் எனது பெயரும் இடம் பெறும் என கற்பனையில் கூட நினைத்தது இல்லை. சதம் விளாசியது ஊக்கம் அளித்தது. எதிர்காலத்தில் 3வது இடத்தில் களமிறங்குவது என் கையில் இல்லை. இத்தொடரில் கேப்டன் சூர்யகுமார் வாய்ப்பு அளித்தார். அணியின் நலனுக்காக எந்த இடத்தில் பேட் செய்யவும் தயாராக உள்ளேன்,''என்றார்.
'தலைவலி'
சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்பும் போது, துவக்க வீரராக சாம்சன் வருவதில் சிக்கல் ஏற்படும். இது பற்றி கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''அவர்கள் வரும் போது பார்ப்போம். நிகழ்காலத்தை கொண்டாடுவோம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிான தொடரை வென்றது ஸ்பெஷல் அனுபவம். 20-25 பேரில் 11 வீரர்களை தேர்வு செய்வது கடினம். இந்த 'தலைவலியை' இந்திய தேர்வுக்குழுவினர் சிறப்பாக கையாள்வர்,'' என்றார்.
'சாரி' கேட்ட சாம்சன்
நான்காவது 'டி-20' போட்டியில் ஸ்டப்ஸ் பந்தை (9.2வது ஓவர்) சிக்சருக்கு பறக்கவிட்டார் சாம்சன். அந்த பந்து அரங்கில் இருந்த ரசிகை ஒருவரின் முகத்தில் தாக்கியது. வலியால் அழுத இவருக்கு 'ஐஸ்' ஒத்தடம் கொடுக்கப்பட்டது. இதை கவனித்த சாம்சன், கையை உயர்த்தி 'சாரி' கேட்டார். இந்த 'வீடியோ' தற்போது 'வைரல்' ஆகியுள்ளது.
'சூப்பர்' 2024'டி-20' அரங்கில் இந்த ஆண்டு (2024) அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நுாறு சதவீத வெற்றியுடன் (8 போட்டி), 'டி-20' உலக கோப்பை வென்றது. 26 போட்டிகளில் 24ல் (வெற்றி சதவீதம் 92.31) வென்றது. 2ல் மட்டும் தோற்றது. 2024ல் இந்திய அணி, ஆப்கன் (3-0), ஜிம்பாப்வே (4-1), இலங்கை (3-0), வங்கதேசம் (3-0), தென் ஆப்ரிக்காவுக்கு (3-1) எதிரான 5 இரு தரப்பு தொடர்களையும் வென்றது.