கும்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலை, சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய சந்தை பகுதியாக உள்ளது. மேலும் தொழில் நகரமாக கும்மிடிப்பூண்டி இருப்பதால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் மக்கள் வெள்ளத்தால், பஜார் பகுதி நிரம்பி வழியும்.
பஜார் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கருதி, 2019ம் ஆண்டு பெத்திக்குப்பம் மேம்பாலம் முதல்கன்னியம்மன் கோவில் மேம்பாலம் வரையிலான,6.6 கி.மீ., ஜி.என்.டி., சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.
இருப்பினும், சாலையின் பெரும் பகுதியை சாலையோர மற்றும் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்தன.
சாலையை விரிவுப் படுத்தியும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியாத நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில், நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். பேரூராட்சி, மின் வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு படை,வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் உடன்இருந்தனர்.
கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் முதல், முனுசாமி நகர் வரையிலான, மூன்று கிலோமீட்டர் சாலையில், நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பெரும்பாலானஆக்கிரமிப்பாளர்கள், தாமாக முன் வந்துஅகற்றிக்கொண்டனர்.
சாலையோரம் இருந்த விளம்பர பலகைகள், பேனர்கள், நடைபாதைகள்மீது இருந்த படிகள், இரும்பு ஏணிப்படிகளை ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டன. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தற்காலிக இரும்பு கடைகள்,ஜெனரேட்டர்கள் போன்றவற்றை அந்தந்த உரிமையாளர்கள், கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தினர்.
ஆக்கிரமிப்புகள்அகற்றும் பணிக்காக, நேற்று காலை முதல் மாலை வரை கும்மிடிப்பூண்டி நகர துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள், நாள் முழுதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, மரங்களையும்ஜே.சி.பி., வாயிலாக அகற்றிக்கொண்டிருந்தனர். அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே, 10க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றினர். அதை கண்ட பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 'மரங்களை எப்படி ஆக்கிரமிப்பு வகையில்சேர்த்தீர்கள்' என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதன்பின் மரங்களை அகற்ற வேண்டாம் என நெடுஞ்சாலை அலுவலர்கள் உத்தரவிட்டனர். மக்கள் எதிர்ப்பால் எஞ்சிய மரங்கள் தப்பின.