சேவை மையங்களாக மாறிய 3,085 கூட்டுறவு சங்கங்கள்
சென்னை: தமிழகத்தில் இதுவரை, 3,085 தொடக்க கூட்டுறவு சங்கங்கள், பல்வேறு தொழில்களை செய்யும் பல சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 4,456 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவை ரேஷன் கடைகள் நடத்துவதுடன், விவசாயி களுக்கு பயிர் கடன், விதை, உரங்களை வழங்குகின்றன.
நாடு முழுதும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. மத்திய அரசு, விவசாய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், அந்த சங்கங்களை, பல்வேறு தொழில் செய்யும் பல சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதற்காக, சங்கங்கள் புதிய தொழில் துவங்க, 'நபார்டு' வங்கி, 4 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. அதில், 3 சதவீதம் மத்திய அரசின் மானியம்.
மீதி, 1 சதவீத வட்டியை மட்டும், சங்கங்கள் செலுத்தினால் போதும். இத்திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்களை, பல சேவை மையங்களாக மாற்றும் பணி, இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இதுவரை, 3,085 சங்கங்கள், 7,549 வேளாண் இயந்திரங்களை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட்டு வருகின்றன.
இதன் வாயிலாக, சங்கங்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைக்கின்றன.