அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

கடலுார்: கடலுாரில் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில், கருணை அடிப்படையிலான பணியிடங்களை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகி காந்தி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாஜலபதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் வேலை அறிக்கை, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நிதிநிலை அறிக்கை வாசித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர்கள் ரவி, காந்தி, மாநில செயற்குழு லெனின் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில், பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஒன்றரை லட்ச ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 5சதவீதமாக குறைக்கப்பட்ட கருணை அடிப்படையிலான பணியிடங்களை, ஏற்கனவே வழங்கியது போல 25சதவீதம் வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் பொற்செழியன் நன்றி கூறினார்.

Advertisement