பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தியவர் கைது

விழுப்புரம்: பெங்களூருவில் இருந்து பஸ்சில் குட்கா கடத்தி வந்த நபரை விழுப்புரம் அருகே போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு பகுதியில் இருந்து பஸ் மூலம், குட்கா பொருட்களை விழுப்புரம் பகுதிக்கு கடத்தி வரப்படுவதாக, காணை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காணை பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா மாநில அரசு பஸ்சில் இருந்து ஒரு வாலிபர் சாக்கு மூட்டையுடன் கீழே இறங்கினார். சந்தேகத்தின்பேரில் சாக்கு மூட்டையை சோதனை செய்தனர்.

அதில், 10 கிலோ எடையில் ௨,௯௦௪ குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த நாயனுாரைச் சேர்ந்த தேவராஜ் மகன் வீரமணி, 24; என்பதும், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து, காணை பகுதியில் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வீரமணியை கைது செய்து, அவரிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement