மக்களுக்கான அடிப்படை வசதி போராடித்தான் பெற வேண்டுமா?
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், மக்களுக்கான பல்வேறு அடிப்படை தேவைகள் உள்ளன.
தினமும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும், சேவைகளை பெறுவதற்கும் ஏராளமானோர் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கும், மண்டல அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். 'இச்சூழலில், சமீபகாலமாக, பல்வேறு திட்டப் பணிகள் விரைவாக நடைபெறுவதில்லை' என்ற புகார்கள் எழுந்துள்ளது.
நுகர்வோர் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த சிலர் கூறியதாவது:
முதல் வார்டு பிரதான சாலையில், பழைய ரேஷன் கடை முதல் அங்குள்ள பேக்கரி வரை கடந்த, 3 ஆண்டு களாக சாலை சேதமடைந்து குழிகளாக காணப்படுவதால், மழைநீர் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதைக்கண்டித்து அப்பகுதியில், நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என, சில அமைப்புகள் அறிவிப்பு வைத்ததை தொடர்ந்து, அப்பகுதியில் சீரமைப்புப்பணி துவங்கியது.
அதேபோன்று, 57வது வார்டு வீரபாண்டி பகுதியில், தொடர் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது என்ற புகாரை தொடர்ந்து, நடவடிக்கைக்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய பிறகே, மழைநீரை வெளியேற்றும் பணிகள் துவங்கின.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முதல் தாராபுரம் சாலை உஷா தியேட்டர் வரை சாலை சேதமடைந்து இருப்பதை கண்டித்து, நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என, விவசாய சங்கங்கள் அறிவித்தன; அதன் பின்னரே சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.
மாநகராட்சி மட்டுமின்றி பிற இடங்களில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பிலும், பல்வேறு பணிகள், மக்களின் போராட்ட அறிவிப்புக்கு பிறகே மேற்கொள்ளப்படுகிறது. அந்தந்த வார்டில் கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் போது கூட, போராட்டங்கள் மற்றும் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக பணிகள் நடப்பது வியப்பளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.