கூட்டணியை தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும்; சுதாகர் ரெட்டி
சென்னை: 'வரும் சட்டசபை தேர்தலில், கூட்டணியை கட்சி மேலிடம் முடிவு செய்யும்; நிர்வாகிகள், கூட்டணி தொடர்பாக தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்காமல், கட்சி வளர்ச்சி பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, அக்கட்சியின் மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இதுவரை அதே கூட்டணி தொடர்கிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அரசியல் உயர் கல்விக்காக, மூன்றுமாத பயணமாக, கடந்த ஆக., இறுதியில், பிரிட்டன் சென்றார். கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக, மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
எதிரான சக்திகள்
கூட்டணி தொடர்பாக அவரிடம் சமீபத்தில் கருத்து கேட்டபோது, 'தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியை, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்' என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
அதேசமயம், உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் சில மூத்த நிர்வாகிகள், கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்; தி.மு.க.,வுக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியிருந்தார்.
இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைய வாய்ப்புள்ளது' என்றார்.
இது, அ.தி.மு.க.,வின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த, இதற்கு உடனடியாக பழனிசாமி விளக்கம் அளித்தார். 'எக்காரணம் கொண்டும் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்காது; நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் தெள்ளத் தெளிவாக இருக்கிறோம்' எனக் கூறினார்.
மேலிட உத்தரவு
இது, பா.ஜ., தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே, குழப்பத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
சமீபத்தில், டில்லி சென்ற எச்.ராஜா, கூட்டணி தொடர்பாக, ஒவ்வொரு நிர்வாகியும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிப்பது தொடர்பான தகவலை, மேலிட தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தையும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என, அறிவுறுத்துமாறு, தமிழக பா.ஜ., இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 'தமிழக பா.ஜ.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது; அந்த பணியில் தான் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். கூட்டணி தொடர்பாக யாரும் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க கூடாது. வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, கூட்டணி தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து, தேசிய தலைமை முடிவு செய்யும்.
எனவே, கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்து, கட்சிக்கும், தலைவர்களுக்கும், தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது.
பலப்படுத்த வேண்டும்
'தி.மு.க., அரசின் ஊழலையும், மோடி அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களையும், கட்சியினர் மக்களிடம் சேர்க்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்; பலவீனப்படுத்துவது போல நடந்து கொள்ளக்கூடாது.
'கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவு எடுக்கும்' என, தெரிவித்து, அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.