'டில்லி உஷ்ஷ்ஷ்...!' ஊழல் பட்டியல் தயார்?




பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இம்மாதம் 25ல் துவங்கி, டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது. வழக்கம் போல கூட்டத்தொடரை முடக்க, பல விஷயங்களை கையில் வைத்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.


அதிலும் காங்.,கைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'பா.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக ஒரு ஊழல் பட்டியல் தயாரித்துள்ளார்; அதை பார்லிமென்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்' என்கின்றனர் காங்கிரசார். ஐந்து ஊழல் புகார்களை சொல்லப்போகிறாராம் ராகுல்.

ராணுவத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதம் உட்பட பல பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல்


உணவு கார்ப்பரேஷனிலும் ஊழல் என ஆரம்பித்து, முழு விபரங்களுடன் பேச தயாராகி விட்டார் ராகுல். இந்த ஊழல் புகார்களை தயாரித்து ராகுலுக்கு கொடுத்தவர், தற்போது அவருக்கு நெருக்கமாக உள்ள ஜெய்ராம் ரமேஷ்.


இதை பார்லிமென்டில் எதிர்கொள்ள பா.ஜ.,வினரும் தயாராகி விட்டனர். இளம் எம்.பி.,க்கள் அனுராக் தாக்குர் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோருக்கு இது தொடர்பாக கட்சி மேலிடத்தின் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.


'இப்படித்தான் ரபேல் போர் விமானம் குறித்து ஊழல் புகார் கூறினார் ராகுல். கடைசியில், ரபேல் வாங்கியது தொடர்பான அனைத்து கோப்புகளையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து, ஊழல் இல்லை என சொல்லிவிட்டது' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.



'ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில், இந்த ஊழல் புகார்களை அவிழ்த்து விட்டிருந்தால், அது காங்கிரசுக்கு சாதகமாக இருந்திருக்குமே; அதை ஏன் ராகுல் செய்யவில்லை. காரணம், உடனே ராகுலிற்கு எதிராக பா.ஜ., வழக்கு தொடரும்; ஆனால், பார்லிமென்டில் பேசினால் வழக்கு போட முடியாது' என்கிறது பா.ஜ., வட்டாரம்.

Advertisement