குடிசை, கைவினைத் தொழிலுக்கு இலவச சான்றிதழ்

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம் குடிசை மற்றும் கைவினைத்தொழிலில் ஈடுபடுவோருக்கு இலவச சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மைய துணை இயக்குநர் ஜெயா கூறியதாவது: கார்பெட், ஹேண்ட் பிரின்டிங், எம்பிராய்டரி, ஜரி வேலை, ஜூவல்லரி, வளையல், பாசி மணி தயாரிப்பு, மரவேலை, செராமிக் வேலை, பொம்மை தயாரிப்பு உட்பட பல்வேறு தொழில்களுக்கு கைவினைத்தொழில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அப்பளம் தயாரிப்பு, தேனீ வளர்ப்பு, பேக்கரி, கேக், காபித்துாள் தயாரிப்பு, பழங்கள் பதப்படுத்துதல், ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்களுக்கு குடிசைத்தொழில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் இருந்தால் மின்கட்டண சலுகை உட்பட பல்வேறு பயன்கள் உண்டு.

2023 ஏப். முதல் 2024 ஏப். வரை 337 பேருக்கு குடிசைத்தொழிலுக்கும் 167 பேருக்கு கைவினைத்தொழிலுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப். முதல் அக். வரை 133 பேருக்கு குடிசைத்தொழில், 66 பேருக்கு கைவினைத்தொழில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் செய்பவர்கள் மாவட்ட தொழில் மையத்திற்கு வந்து சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆய்வாளர்கள் தொழில் செய்யும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து வழங்குபவர். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றார்.

Advertisement