தேவை எஸ்.புதுார் மலைத்தொடரில் பாம்பு பண்ணை விவசாயம் சார்ந்த சுற்றுலா தொழிலுக்கு வாய்ப்பு

எஸ்.புதுார்: எஸ்.புதுார் மலையில் தொடர்ந்து விடப்படும் பாம்புகளால் அடிவார கிராம மக்கள் அவதிப்படும் நிலையில் பண்ணை அமைத்து பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சிங்கம்புணரி அருகே பிரான்மலை, எஸ்.புதுார் மலைப்பகுதியில் ஏராளமான அரிய வகை பாம்புகள் திரிகிறது. வீரிய விஷம் கொண்ட, விஷமற்ற பாம்புகளும் நிறைய உள்ளது. இங்கு 15 அடி வரை நீளம் கொண்ட மலைப்பாம்புகளும் உள்ளன.

பாம்புகளை பிடிக்கவும் கொல்லவும் தடை இருக்கும் நிலையில், இம்மலைகளில் இவற்றின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

வெளியூர்களில் பிடிபடும் மலைப்பாம்புகளை தீயணைப்புத் துறையினர் மூலம் பிடித்து வனத்துறையினர் இப்பகுதியில் விடுகின்றனர். அவை மீண்டும் அடிவார கிராமங்களுக்குள் இறங்கி ஆடு, கோழிகளை துவம்சம் செய்கிறது.

இதனால் பிடிபடும் பாம்புகளை திறந்தவெளியில் விடாமல் பண்ணை அமைத்து பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பி.பழனியப்பன், விவசாயி, திருவாழ்ந்துார்: பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்பர். சில வருடங்களாக எஸ்.புதூர் ஒன்றியத்தில் மலைப் பகுதியை ஒட்டியுள்ள காடு, வயல்களில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பிடிபடும் மலைப்பாம்புகளை இங்கு வந்து விடுகிறார்கள். அவை விவசாய நிலங்களில் திரிகிறது.

பிடிபடும் பாம்புகளை பெரிய நிலப்பரப்பில் பண்ணை அமைத்து, அடைத்து வைத்து பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் பிடிபடும் பாம்புகளுக்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் அரிய வகை பாம்புகளை சேகரித்து பாதுகாத்து சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தவும் முடியும். வண்டலூரை போல் பாம்புப் பண்ணை அமைப்பதன் மூலம் இவ்வொன்றியத்தை விவசாயம் சார்ந்த சுற்றுலா பகுதியாக உருவாக்கலாம். மேலும் மலைத் தொடரில் ஏராளமான அரிய வகை ஓணான், பச்சோந்தி, உடும்பு உள்ளிட்ட விலங்குகளும் நிறைய உள்ளன.

அவற்றையும் சிலவற்றை பண்ணையில் வைத்து பராமரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிப்படுத்தலாம்.

இதன் மூலம் விவசாயம் மட்டுமல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழிலும் இப்பகுதியில் வளரும் என்றார்.

Advertisement