நயினார்கோவிலில் நாடக கலைக்கு உயிர் கொடுத்த பேக்கரி மாஸ்டர் 58 வயதில் அரிச்சந்திரா அரங்கேற்றம்

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பெருங்களூர் கிராமத்தில் தனது 58-வது வயதில் நாடகக் கலைக்கு உயிரூட்டும் வகையில் அரிச்சந்திரா நாடகத்தை பேக்கரி மாஸ்டர் அரங்கேற்றி உள்ளார்.

நவீனமயமாகிப்போன சினிமா உலகில் நாடகக் கலைக்கு இன்றளவும் கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் கோயில் விழாக்கள் உட்பட பல்வேறு சமயங்களில் அரிச்சந்திரா, வள்ளி திருமண நாடகங்கள் என நடத்தப்பட்டு வருகிறது.

பெருங்களூர் கிராமத்தில் ஏராளமான கிராமப்புற பாடல் கலைஞர்கள், ஹார்மோனிஸ்ட் மற்றும் நாடக நடிகர்கள் இருக்கின்றனர்.

இவர்களில் கரு.விஸ்வநாதன் 75, என்பவரை மானசீக குருவாக ஏற்று பேக்கரி மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி 58, இருந்து வந்துள்ளார்.

இவர் தனது 58 வது வயதில் அரிச்சந்திரா மயான காண்டத்தை சொந்த கிராமத்தில் மேடையேற்றி தானே அரிச்சந்திரனாக நடித்து நாடக கலைக்கு உயிர்ப்பை உண்டாக்கி உள்ளார்.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சிறு வயது முதல் நாடகக் கலையில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தேன். தொடர்ந்து வெளிநாடுகளில் பேக்கரியில் பணி செய்து வந்தேன்.

இந்நிலையில் கடந்த மாதம் தாயகம் திரும்பி நிலையில் எனது மாமா ராஜ நடிகர் விஸ்வநாதனை குருவாக ஏற்று எனது சொந்த நிதியில் ரூ.2 லட்சம் செலவு செய்து நாடகத்தை அரங்கேற்றி உள்ளேன். தொடர்ந்து பல்வேறு நாடகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன், என்றார்.

Advertisement