'குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் செய்தித்தாள்!'
'வாள் முனையின் வலிமையைவிட, பேனா முனையின் சக்தி பலம் வாய்ந்தது,' என்றார், பிரெஞ்ச் நாட்டின் எழுத்துலக சிற்பி வால்டேர்.
'ஒரு ஆட்சியை பேனா முனையில் அழிக்கவும் முடியும்; ஆக்கவும் முடியும். எழுதுகோல் சிந்தனையால் கவிழ்க்கவும் இயலும்; காக்கவும் முடியும்' அந்த சக்தி வாய்ந்த வார்த்தைகள் சொல்லும் உண்மை. அரசியல் சட்டம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என்ற முப்பெரும் சக்திக்கு மேலாக, ஜனநாயகத்தின் நான்காவது துாண் என்ற அந்தஸ்த்தை, அங்கீகாரத்தை செய்தித்தாள்கள் பெற்றுள்ளன.
செய்தித்தாள்களின் முக்கியத்துவம், மகத்துவம் உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும், நவ., 16ம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கடைபிடிக்கப்படுகிறது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் இந்நாளையொட்டிபயிலரங்கு நடத்தப்பட்டது.
மாணவ பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி, முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு 2 ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன்குமார், பேசுகையில், ''மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வெளியிட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பதில், செய்தித்தாள்கள் முக்கியப்பங்காற்றுகின்றன. குரலற்றவர்களின் குரலாக செய்தித்தாள்கள் விளங்குகின்றன. மாணவர்கள் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, போட்டி தேர்வுக்குரிய விஷயங்களையும் செய்தித்தாள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்,'' என்றார். பின், மாணவர்கள் செய்தித்தாள்களை வாசித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசிக்க... வாசிக்க நேசிக்க துாண்டும்!
இன்றைய சூழலில் எண்ணற்ற செய்தித்தாள், சமூக ஊடகங்கள் செய்திகளை பரப்புகின்றன. 'இதில் எது உண்மை, நம்பகத்தன்மை கொண்டது' என்ற குழப்பம் அரசு அதிகாரிகள் துவங்கி, பொதுமக்கள் வரையில் ஏற்படுவது இயல்புதான். உள்ளூர் அளவில், நாம் குடியிருக்கும் வீதி, தெரு சார்ந்து வெளியிடப்படும் செய்திகளை கவனிக்க வேண்டும்.
இதன் வாயிலாக எந்த செய்தித்தாள் சரியான தகவலை சொல்கிறது என்பதை உணர முடியும். அந்த செய்தித்தாளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூர் பிரச்னை துவங்கி உலக, தேசிய, மாநில செய்திகளை கூட அறிந்து கொள்ள முடியும். அந்த செய்தித்தாளில் வரும் பிரச்னைகளை உதாசீனப்படுத்தாமல், அதிகாரிகள் சரியான முறையில் கையாள்வதன் வாயிலாக தீர்வும் கிடைக்கும் என, கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்ட யதார்த்த விஷயங்கள்.