சாலுார் சாலை படுமோசம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அருகே அகத்தீஸ்வரமங்கலம் - சாலுார் இடையே ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் சாலை உள்ளது.

இத்தடத்தில் உள்ள சாலுார், மாம்பாக்கம் பகுதியினர், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தேவைகளுக்கும், அரசு, தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கும் திருக்கழுக்குன்றம் செல்கின்றனர்.

இத்தடத்தில் 2 கி.மீ., தொலைவிற்கும் மேல், வனத்துறை பகுதியில் சாலை குறுக்கிடுகிறது. அதேபோல், சாலுார் - வீரகுப்பம் சாலையும், வனத்துறை பகுதியில் குறுக்கிடுகிறது.

இச்சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, நாளடைவில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. பல ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தும், வனத்துறை அனுமதி சிக்கலால் புதிய சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர், சாலை பள்ளங்களில் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். முதியோர், பெண்கள் வாகனம் ஓட்ட முடியாத நிலை உள்ளது.

Advertisement