சாலையில் உருவான குளங்கள் '8' போடும் வாகன ஓட்டிகள்
மறைமலைநகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிபுண்ணியம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதிவாசிகள் தினமும், மகேந்திரா சிட்டி -செட்டிபுண்ணியம் சாலை வழியாக செங்கல்பட்டு, தாம்பரம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து உள்ளன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், தொடர் மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சாலையில் கல் அரவை ஆலைகளுக்கு அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால், சாலை சேதமடைவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
மேலும், அதிகளவில் செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.